யோபு 19:21-27

யோபு 19:21-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்; இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது. இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்? என்னை வேதனைப்படுத்தியது போதாதோ? “ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு, ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால், அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால், அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன். என் தோல் அழிந்துபோன பின்னும், நான் என் உடலில் இறைவனைக் காண்பேன். நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்; வேறொருவன் அல்ல, நானே காண்பேன். என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!

யோபு 19:21-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.

யோபு 19:21-27 பரிசுத்த பைபிள் (TAERV)

“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்! எனக்கு இரங்குங்கள்! ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார். தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா? “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா? என விரும்புகிறேன். என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா? என விரும்புகிறேன். நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன். என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்! முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்! நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும், பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்! என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்! நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்! நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.

யோபு 19:21-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன? ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்