எரேமியா 5:18-23

எரேமியா 5:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார். மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல். “இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து யூதா நாட்டில் பிரசித்தப்படுத்து: மூடரே, உணர்ச்சியற்ற மக்களே, கண்கள் இருந்தும் காணாதவர்களே, காதுகள் இருந்தும் கேளாதவர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்: நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ? நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன். கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன். அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது. அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது. ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.

எரேமியா 5:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களை முற்றிலும் அழிக்காதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினால் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்தில் அந்நிய தெய்வங்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்தில் அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக. நீங்கள் யாக்கோபின் வீட்டில் அறிவித்து, யூதாவில் சொல்ல வேண்டியது என்னவென்றால், கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத மக்களே, கேளுங்கள். எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ? இந்த மக்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்செய்து போய்விடுகிறார்கள்.

எரேமியா 5:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல். கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும், யூதா நாட்டினரையும் நோக்கி: நீங்கள் மதிகேடர்கள், உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை! உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை! நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார். “எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும். கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே. இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன். கரையை அலைகள் தாக்கலாம். ஆனால் அவை அதனை அழிக்க முடியாது. அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம். ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது. மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.

எரேமியா 5:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக. நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள். எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ? இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்