எசேக்கியேல் 14:1-8

எசேக்கியேல் 14:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலின் முதியவர்கள் சிலர் எனக்கு முன்பாக வந்து அமர்ந்தார்கள். அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது, “மனுபுத்திரனே, இந்த மனிதர் தங்கள் இருதயங்களில் விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள். இப்படியானவர்கள் என்னிடம் விசாரணை செய்ய நான் இடமளிக்க வேண்டுமோ? ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன். தங்களுடைய விக்கிரகங்களின் நிமித்தம், என்னைவிட்டு விலகிப்போன இஸ்ரயேல் மக்களின் இருதயங்களை மீண்டும் நான் என் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு செய்வேன்.’ “ஆதலால் நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மனந்திரும்புங்கள்; உங்கள் விக்கிரங்களை விட்டுத் திரும்புங்கள். எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களைவிட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள். “ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன். நான் அவனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை ஒரு உதாரணமாகவும் ஒரு பழமொழியாகவும் வைத்து, அவனை என் மக்களிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 14:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலுடைய மூப்பர்களில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, இந்த மனிதர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளைத் தங்களுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தங்களுடைய அக்கிரமமாகிய இடறலைத் தங்களுடைய முகத்திற்கு முன்பாக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா? ஆகையால், நீ அவர்களுடன் பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியிடம் வந்தால், யெகோவாகிய நான் இஸ்ரவேலர்களுடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய அசுத்தமான சிலைகளின் எண்ணிக்கைக்குத்தக்கதாக பதில் கொடுப்பேன். அவர்கள் எல்லோரும் தங்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி, என்னை விட்டுப் விலகிப்போனார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்களுடைய அசுத்தமான சிலைகளை விட்டுத் திரும்புங்கள்; உங்களுடைய எல்லா அருவருப்புகளையும் விட்டு உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் விலகி, தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியின் மூலமாக என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் யெகோவாகிய நானே உத்திரவுகொடுத்து, அந்த மனிதனுக்கு விரோதமாக என்னுடைய முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடிக்கு அழித்துப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 14:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’ “எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்!

எசேக்கியேல் 14:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலுடைய மூப்பரில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா? ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன். அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னை விட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து, அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்