உபாகமம் 28:1-8

உபாகமம் 28:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்: நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும். உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும். நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள். உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். “உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

“இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்: “நகரத்திலும் வயலிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார். அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார். அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார். அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார். அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களது கூடைகளையும், பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார். கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார். “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள். “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.