உபாகமம் 28:1-8
உபாகமம் 28:1-8 TAERV
“இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்: “நகரத்திலும் வயலிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார். அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார். அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார். அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார். அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களது கூடைகளையும், பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார். கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார். “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள். “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார்.


