2 நாளாகமம் 35:20-27

2 நாளாகமம் 35:20-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவை எல்லாவற்றிற்கும்பின் யோசியா ஆலயத்தை ஒழுங்குபடுத்தினான். அப்பொழுது எகிப்தின் அரசனான நேகோ யூப்ரட்டீஸ் நதியோரம் இருந்த கர்கேமிஸ் பட்டணத்திற்கு சண்டையிடப் போனான். யோசியா யுத்தத்தில் அவனை எதிர்கொள்ள அணிவகுத்துப் போனான். ஆனால் நேகோ அவனிடம் தூதுவர்களை அனுப்பி, “யூதாவின் அரசனே! எனக்கும் உமக்கும் இடையில் என்ன சச்சரவு உண்டு? இம்முறை நான் தாக்குவது உம்மையல்ல; என்னுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தையே தாக்குகிறேன். இறைவன் அதை விரைவாகச் செய்ய என்னிடம் கூறியிருக்கிறார். எனவே என்னோடு இருக்கிற இறைவனை எதிர்ப்பதை நிறுத்தும்; இல்லையெனில் அவர் உம்மை அழித்துப்போடுவார்” என்று சொல்லி அனுப்பினான். ஆயினும் யோசியா அவனைவிட்டுத் திரும்பிப் போகவில்லை. யுத்தத்தில் ஈடுபடுவதற்கு அவன் மாறுவேடம் அணிந்தான். அவன் இறைவனின் கட்டளைப்படி நேகோ கூறியவற்றுக்கு செவிகொடுக்காமல் மெகிதோ சமவெளியில் சண்டையிடப் போனான். வில்வீரர் யோசியா அரசனின்மேல் அம்பெய்தார்கள். அப்பொழுது அவன் தன் அதிகாரிகளிடம், “என்னைக் கொண்டுபோங்கள்; நான் மிக மோசமாகக் காயப்பட்டுள்ளேன்” என்று சொன்னான். எனவே அவர்கள் அவனை அவனுடைய தேரிலிருந்து எடுத்து அவனிடமிருந்த மற்ற தேரில் வைத்து, எருசலேமுக்குக் கொண்டுபோக அவன் அங்கே இறந்தான். அவன் அவனுடைய முற்பிதாக்களின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா, எருசலேமில் உள்ள அனைவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். எரேமியா யோசியாவுக்குப் புலம்பல்களை இயற்றினான். எல்லா பாடகர்களும், பாடகிகளும் இப்புலம்பலைப் பாடி யோசியாவை நினைவுகூருகிறார்கள். இவை இஸ்ரயேலில் வழக்கமான நியமமாய் இருந்து, புலம்பல்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோசியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், யெகோவாவின் சட்டத்தில் எழுதியுள்ளபடி அவனுடைய பக்தி செயல்களும், தொடக்கமுதல் முடிவு வரையுள்ள எல்லா நிகழ்வுகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

2 நாளாகமம் 35:20-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐப்பிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான். அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான். ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடு போர்செய்ய மாறுவேடமிட்டு, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே போர்செய்கிறதற்கு வந்தான். வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான். அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகர்களும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவைக்குறித்துப் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழக்கமாக இருக்கிறது; அவைகள் புலம்பலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கு ஏற்ற அவன் செய்த நன்மைகளும், அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 35:20-27 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள், “யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர். ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான். எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.

2 நாளாகமம் 35:20-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டான். அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான். ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான். வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான். அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும், அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்