நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 35

35
யோசியா பஸ்காவைக் கொண்டாடுகிறான்
1எருசலேமில் கர்த்தருக்கு யோசியா ராஜா பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது. 2யோசியா ஆசாரியர்களை அவர் தம் கடமைகளைச் செய்யத் தேர்ந்தெடுத்தான். அவன் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது உற்சாகப்படுத்தினான். 3யோசியா லேவியர்களோடு பேசினார். அந்த லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்பிக்கிறவர்கள். கர்த்தருக்குச் செய்யும் சேவைகளால் பரிசத்தமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள். அவன் அவர்களிடம், “சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்தப் பெட்டியை வையுங்கள். சாலொமோன் தாவீதின் குமாரன். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். மீண்டும் நீங்கள் பரிசுத்தப் பெட்டியை உங்கள் தோளில் சுமந்து இடம்விட்டு இடம் அலையாதீர்கள். இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். தேவனுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்குச் சேவை செய்யுங்கள். 4ஆலயத்தில் உங்கள் கோத்திரத்தின் சார்பாகச் சேவைசெய்ய தயாராகுங்கள். தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் உங்களுக்கு ஒதுக்கிய வேலைகளைச் செய்யுங்கள். 5லேவியர்கள் குழுவுடன் பரிசுத்தமான இடத்தில் நில்லுங்கள். நீங்கள் இதனை வெவ்வேறு கோத்திரங்களினால் செய்யுங்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். 6பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். கர்த்தருக்கு முன்பு பரிசத்தமாக இருங்கள். இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்கள் சகோதரர்களுக்கு ஆட்டுக் குட்டிகளைத் தயார் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு மோசே மூலம் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறார்” என்றான்.
7யோசியா 30,000 செம்மறியாடுகளையும், ஆட்டுக் கடாக்களையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவில் பலியாகக் கொல்வதற்குக் கொடுத்தான். அவன் ஜனங்களுக்கு 3,000 கால்நடைகளையும் கொடுத்தான். இந்த விலங்குகள் அனைத்தும் யோசியா ராஜாவின் சொந்த விலங்குகள். 8யோசியாவின் அதிகாரிகளும் இலவசமாக ஆடுகளையும் பொருட்களையும் ஜனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் பஸ்கா காணிக்கைக்காக கொடுத்தனர். தலைமை ஆசாரியனான இல்க்கியா, சகரியா மற்றும் யெசியேல் ஆகியோர் ஆலயத்தின் பொறுப்பான அதிகாரிகள். அவர்கள் ஆசாரியர்களுக்கு 2,600 ஆட்டுக்குட்டிகளையும், 300 காளைகளையும் பஸ்கா பலியாகக் கொடுத்தார்கள். 9மேலும், தனது சகோதரர்களான செமாயா மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் அசாபியா, ஏயேல் மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் இனணந்து கொனானியா, 500 செம்மறி ஆடுகளையும், காளைகளையும் பஸ்கா பலியாக லேவியர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் லேவியர்களின் தலைவர்கள்.
10பஸ்கா சேவைத் தொடங்குவதற்கு அனைத்தும் தயாராக இருந்தபொழுது ஆசாரியர்களும், லேவியர்களும் அவர்களின் இடத்திற்குச் சென்றனர். இதுவே ராஜாவின் கட்டளையாகும். 11பஸ்கா ஆடுகள் கொல்லப்பட்டன. பிறகு லேவியர்கள் தோலை உரித்தனர். இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 12பிறகு அவர்கள் தகன பலிகளுக்காக வெவ்வேறு கோத்திரங்களுக்கு மிருகங்களைக் கொடுத்தனர். மோசேயின் சட்டம் தகனபலிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்று போதித்ததோ அவ்வாறே இது செய்யப்பட்டது. 13லேவியர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே பஸ்கா பலிகளை தீயில் வறுத்தார்கள். அவர்கள் பரிசுத்தமான பலிகளைப் பானைகளிலும், கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்தனர். உடனடியாக அவர்கள் அவற்றை ஜனங்களுக்குக் கொடுத்தனர். 14இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள். 15ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்த லேவியப் பாடகர்கள் ராஜா தாவீது தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை அடைந்தார்கள். அவர்கள் ஆசாப், ஏமான், ராஜாவின் தீர்க்கதரிசியான எதுத்தானும் சொன்னபடியே தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டிருந்தார்கள். வாசல் காவலர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள். அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்காக அவர்களின் சகோதரரான லேவியர்கள் பஸ்காவில் அனைத்தையும் தயார் செய்துவிட்டனர்.
16எனவே, யோசியா ராஜாவின் கட்டளைப்படி அன்று நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தும் நடந்தேறின. கர்த்தருடைய பலிபீடத்தில் தகனபலிகள் கொடுக்கப்பட்டு பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. 17அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையையும் ஏழு நாட்களாகக் கொண்டாடினார்கள். 18தீர்க்கதரிசி சாமுவேல் காலத்திலிருந்து இன்றுவரை பஸ்கா பண்டிகை இதுபோல் எப்போதும் கொண்டாடப்படவில்லை. எந்தவொரு ராஜாவும் இஸ்ரவேலில் இதுபோல் பஸ்காவைக் கொண்டாடவில்லை. யோசியா ராஜா, ஆசாரியர்கள் லேவியர்கள், யூதா ஜனங்கள். எருசலேமில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பஸ்காவைச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள். 19அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
யோசியாவின் மரணம்
20யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். 21ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,
“யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
22ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
24எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். 25யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
26-27யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 35: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்