1 நாளாகமம் 29:14-20

1 நாளாகமம் 29:14-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம். நாங்கள் உமக்கு முன்பாக எங்களுடைய முற்பிதாக்களைப் போலவே அந்நியரும், வழிப்போக்கருமாய் இருக்கிறோம். பூமியிலே எங்கள் நாட்கள் எதிர்பார்பற்ற நிழலைப்போல இருக்கிறது. யெகோவாவாகிய எங்கள் இறைவனே, உமது பரிசுத்த பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் ஏராளமாய் கொடுத்திருக்கும் இந்த நிறைவு உமது கரத்திலிருந்தே வருகின்றன; இவை எல்லாம் உமக்கே சொந்தமானவை. என் இறைவனே, நீர் இருதயத்தை சோதிக்கிறவர் என்றும், உத்தமத்தில் மகிழ்ச்சிகொள்பவர் என்றும் நான் அறிவேன். இப்பொருட்கள் எல்லாவற்றையும் நான் விருப்பத்துடனும், உண்மையான நோக்கத்துடனும் கொடுத்திருக்கிறேன். இங்கிருக்கும் உமது மக்கள் எவ்வளவு விருப்பத்துடன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்தேன். எங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்களின் உள்ளத்தில் இந்த ஆசையை என்றென்றைக்கும் வைத்திரும். அவர்கள் இருதயத்தை உமக்கு உண்மையுள்ளதாக வைத்திரும். எனது மகன் சாலொமோன் உம்முடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், நியமங்களையும் முழுமனதுடன் செய்யும் எல்லா ஆற்றலைக் கொடும். நான் ஆயத்தம் செய்த, இந்தப் பெரிய ஆலயத்தைக் கட்டும்படி வேண்டிய எல்லாவற்றையும் செய்ய மனப்பக்குவத்தைக் கொடும்.” அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள்.

1 நாளாகமம் 29:14-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன். ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான். அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு.

1 நாளாகமம் 29:14-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல! அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன. நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம். நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம். இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது. இதனை நிறுத்த முடியவில்லை. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம். உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம். ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன. எல்லாம் உமக்குரியன. எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன். ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர். நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன். நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன், சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்! உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும். என் குமாரன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும், உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும். நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான். பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் வணங்கினார்கள்.

1 நாளாகமம் 29:14-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன். ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான். அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்