1 நாளாகமம் 29

29
ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்
1அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே. 2நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன். 3அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன். 4ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும், 5அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான்.
6அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். 7அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து#29:7 அதாவது, சுமார் 190 டன் தங்கம் தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து#29:7 அதாவது, சுமார் 380 டன் தங்கம் வெள்ளியையும், பதினெட்டாயிரம்#29:7 அதாவது, சுமார் 675 டன் தங்கம் தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து#29:7 அதாவது, சுமார் 3800 டன் இரும்பு இரும்பையும் கொடுத்தார்கள். 8அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள். 9தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
தாவீதின் மன்றாட்டு
10அங்கிருந்த மக்கள் சபைக்கு முன்னிலையில் தாவீது யெகோவாவைத் துதித்தான். அவன்,
“யெகோவாவே, நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும்
எங்கள் முற்பிதாவான இஸ்ரயேலின் இறைவனாய் இருப்பவரே,
உமக்கே துதி உண்டாவதாக.
11யெகோவாவே, மேன்மையும், வல்லமையும்,
மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே.
வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே.
யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே.
நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
12செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன;
எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே.
எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும்
பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.
13எங்கள் இறைவனே, இப்பொழுது உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
உமது மகிமையுள்ள பெயருக்கும் துதி செலுத்துகிறோம்.
14“இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம். 15நாங்கள் உமக்கு முன்பாக எங்களுடைய முற்பிதாக்களைப் போலவே அந்நியரும், வழிப்போக்கருமாய் இருக்கிறோம். பூமியிலே எங்கள் நாட்கள் எதிர்பார்பற்ற நிழலைப்போல இருக்கிறது. 16யெகோவாவாகிய எங்கள் இறைவனே, உமது பரிசுத்த பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் ஏராளமாய் கொடுத்திருக்கும் இந்த நிறைவு உமது கரத்திலிருந்தே வருகின்றன; இவை எல்லாம் உமக்கே சொந்தமானவை. 17என் இறைவனே, நீர் இருதயத்தை சோதிக்கிறவர் என்றும், உத்தமத்தில் மகிழ்ச்சிகொள்பவர் என்றும் நான் அறிவேன். இப்பொருட்கள் எல்லாவற்றையும் நான் விருப்பத்துடனும், உண்மையான நோக்கத்துடனும் கொடுத்திருக்கிறேன். இங்கிருக்கும் உமது மக்கள் எவ்வளவு விருப்பத்துடன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்தேன். 18எங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்களின் உள்ளத்தில் இந்த ஆசையை என்றென்றைக்கும் வைத்திரும். அவர்கள் இருதயத்தை உமக்கு உண்மையுள்ளதாக வைத்திரும். 19எனது மகன் சாலொமோன் உம்முடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், நியமங்களையும் முழுமனதுடன் செய்யும் எல்லா ஆற்றலைக் கொடும். நான் ஆயத்தம் செய்த, இந்தப் பெரிய ஆலயத்தைக் கட்டும்படி வேண்டிய எல்லாவற்றையும் செய்ய மனப்பக்குவத்தைக் கொடும்.”
20அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள்.
சாலொமோன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படல்
21அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள். 22அந்த நாளிலே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பெருமகிழ்ச்சியுடன் சாப்பிட்டு குடித்தார்கள்.
அதன்பின் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகத் தாவீதின் மகன் சாலொமோனை ஆளுநனாய் இருக்கும்படியும், சாதோக்கை ஆசாரியனாக இருக்கும்படியும் இரண்டாம் முறையாக அபிஷேகம்பண்ணி ஏற்றுக்கொண்டார்கள். 23எனவே சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் இடத்தில் யெகோவாவின் அரியணையில் அரசனாய் அமர்ந்திருந்தான். அவன் செழிப்படைந்தான்; எல்லா இஸ்ரயேலரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். 24எல்லா அதிகாரிகளும், செல்வாக்குள்ளவர்களும் தாவீதின் மற்ற எல்லா மகன்களும்கூட அரசன் சாலொமோனுக்கு கீழ்ப்படிவதாக வாக்குக்கொடுத்தனர்.
25யெகோவா சாலொமோனை எல்லா இஸ்ரயேலரின் பார்வையிலும் மிகவும் உயர்த்தினார். இஸ்ரயேலில் ஒரு அரசனும் முன் ஒருபோதும் பெற்றிருக்காத அரச மகத்துவத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.
தாவீதின் மரணம்
26இவ்விதமாக ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாயிருந்தான். 27அவன் இஸ்ரயேலை நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். எப்ரோனில் ஏழு வருடமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் ஆட்சிசெய்தான். 28அவன் நீடித்த வாழ்வையும், செல்வத்தையும், கனத்தையும் அனுபவித்தவனாக நல்ல முதிர்வயதில் இறந்தான். அவனுடைய இடத்தில் அவன் மகன் சாலொமோன் அரசனாக இருந்தான்.
29தாவீது அரசனின் ஆட்சிக்காலத்தில் தொடக்கமுதல் முடிவுவரை நடந்த நிகழ்ச்சிகள் யாவும் தரிசனக்காரனான சாமுயேலின் பதிவேடுகளிலும், இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், தரிசனக்காரனான காத்தின் பதிவேடுகளிலும் எழுதப்பட்டுள்ளன. 30அத்துடன் அவனுடைய ஆட்சியைப்பற்றிய விபரமும், அவனுடைய வல்லமையும், இஸ்ரயேலையும், மற்ற எல்லா நாட்டு அரசுகளையும் சுற்றியிருந்த சூழ்நிலைகளும் எழுதப்பட்டுள்ளன.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 நாளாகமம் 29: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்