சகரியா 7

7
நீதியும் இரக்கமும்
1தரியு அரசன் ஆட்சி செய்த நான்காம் வருடம், கிஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதம், நான்காம் நாள் கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு வந்தது. 2பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்-மெலெக் என்பவர்களைத் தங்கள் ஆட்களுடன், கர்த்தரின் தயவை வேண்டும்படி அனுப்பினார்கள். 3அவர்கள் வந்து சேனைகளின் கர்த்தரின் ஆலய மதகுருக்களிடமும், இறைவாக்கினரிடமும், “பல வருடங்களாக நாம் கடைப்பிடித்து வந்தது போல, ஐந்தாம் மாதத்தில் அழுது புலம்பி உபவாசம் இருக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.
4அப்போது சேனைகளின் கர்த்தருடைய வார்த்தை எனக்கு வந்தது: 5“நீ இந்த நாட்டின்#7:5 இந்த நாட்டின் – யூதா மக்கள் எல்லோரையும் மதகுருக்களையும் கேட்க வேண்டியதாவது, கடந்த எழுபது வருடமாக ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் நீங்கள் உபவாசமிருந்து துக்கம் அனுஷ்டித்தபோது, உண்மையாக எனக்காகவா உபவாசம் இருந்தீர்கள்? 6நீங்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும் உங்களுக்காக அல்லவா விருந்து கொண்டாடினீர்கள்? 7முன்னைய இறைவாக்கினரைக் கொண்டு கர்த்தர் இதைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கவில்லையா? எருசலேமும் அதன் சுற்றுப்புற பட்டணங்களும் அமைதியாயும் செழிப்பாயும் இருந்தபோதும், தெற்குப் பிரதேசங்களிலும் மேற்கே மலையடிவாரங்களிலும் குடியிருப்புகள் சமாதானமாய் இருந்தபோதும் அவர் இவற்றை அறிவிக்கவில்லையா?”
8கர்த்தருடைய வார்த்தை மீண்டும் சகரியாவுக்கு வந்தது: 9“சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: ‘உண்மையாக நீதி செய்து, ஒருவர்மீது ஒருவர் இரக்கமும் கருணையும் உள்ளவர்களாய் இருங்கள். 10கணவனை இழந்தவளையும், திக்கற்ற பிள்ளையையும், அந்நியனையும், ஏழையையும் ஒடுக்காமலும், உங்கள் உள்ளத்தில் ஒருவருக்கெதிராக ஒருவர் தீங்கானதைத் திட்டமிடாமலும் இருங்கள்.’
11“ஆனால் நான் சொன்னவற்றை அவர்கள் கவனிக்க மறுத்தார்கள்; பிடிவாதமாக தங்கள் முதுகைக் காண்பித்து, தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டார்கள். 12அவர்கள் தங்கள் இருதயங்களைக் கல்லைப் போல் கடினமாக்கி, முன்னைய இறைவாக்கினர் மூலம் சேனைகளின் கர்த்தர் தம் ஆவியானவரால் கொடுத்த சட்டத்துக்கோ, வார்த்தைகளுக்கோ செவிமடுக்க மறுத்தார்கள். ஆதலால் சேனைகளின் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார்.
13“ ‘நான் அழைத்தபோது அவர்கள் செவிசாய்க்கவில்லை. ஆதலால் அவர்கள் அழைத்தபோது நானும் செவிசாய்க்கவில்லை’ என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 14‘நான் அவர்களை ஒரு சுழல் காற்றினால் அவர்கள் அறியாதிருந்த இனங்களிடையே சிதறடித்தேன்; இவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற நாடு போக்குவரத்து இல்லாமல் பாழாய்ப் போயிற்று. இவ்வாறே அவர்கள் அந்தச் செழிப்பான நாட்டைப் பாழாக்கினார்கள்.’ ”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா 7: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்