சகரியா 14

14
கர்த்தரின் வருகையும் ஆட்சியும்
1இதோ, கர்த்தரின் நாள் வருகின்றது, அப்போது உங்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டவை உங்கள் மத்தியிலேயே பங்கிடப்படும்.
2நான் எருசலேமுக்கு எதிராகப் போரிடும்படி அனைத்து இனங்களையும் ஒன்றுதிரட்டுவேன்; பட்டணம் கைப்பற்றப்படும், வீடுகள் கொள்ளையிடப்படும், பெண்கள் பலவந்தமாய் பாலுறவுக்கு உட்படுத்தப்படுவார்கள், பட்டணத்தின் மக்களில் அரைப் பகுதியினர் நாடுகடத்தப்படுவார்கள், மீதியான மக்கள் பட்டணத்தைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். 3அப்போது கர்த்தர் வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப் போல் அந்த இனங்களுக்கு விரோதமாகச் சண்டையிடுவார். 4அந்தநாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மீது நிற்கும். அப்போது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்றைய அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும். 5நீங்கள் என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால் என்ற இடம்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியா ஆட்சி செய்த நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப் போல ஓடிப்போவீர்கள். அப்போது என் இறைவனாகிய கர்த்தர் வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.
6அந்தநாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இருக்காது. 7அந்தநாள் பகலுமின்றி இரவுமின்றி கர்த்தரினால் அறியப்பட்ட ஒரு ஒப்பற்ற நாளாயிருக்கும். ஆனாலும் மாலை நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்.
8அந்தநாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாய்ந்தோடும். குளிர்காலத்தைப் போலவே கோடைகாலத்திலும் அதன் அரைப்பங்கு கிழக்கே சாக்கடலையும், அரைப்பங்கு மேற்கே மத்தியதரைக் கடலையும் சென்றடையும்.
9கர்த்தரே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும்.
10கேபா நகரத்திலிருந்து எருசலேமுக்குத் தெற்கேயுள்ள ரிம்மோன் நகரம்வரை இருக்கும் பிரதேசமெல்லாம் அரபா சமபூமியைப் போலாகும். எருசலேமோ, பென்யமீன் வாசல் தொடங்கி முதலாம் வாசல் வழியாக, மூலை வாசல் வரையிலும், அனானயேல் கோபுரத்திலிருந்து அரசனின் திராட்சை ஆலை வரையிலும் உயர்த்தப்பட்டு தன் இடத்தில் நிலைநிற்கும். 11எருசலேம் குடியேற்றப்படும்; எருசலேம் இனி ஒருபோதும் அழிக்கப்பட மாட்டாது; அது பாதுகாப்பாயிருக்கும்.
12எருசலேமுக்கு எதிராக போர் செய்த அனைத்து மக்கள் கூட்டங்களையும் கர்த்தர் கொள்ளைநோயினால் வாதிப்பார்: அவர்கள் காலூன்றி நிற்கையில் அவர்களின் தசை அழுகிப்போகும். அவர்களின் கண்கள் அதன் கட்குழியில் அழுகிப்போகும். அவர்களின் நாவுகள் அவர்களின் வாய்க்குள் அழுகிவிடும். 13அந்தநாளில் கர்த்தரிடமிருந்து வரும் பெரும் திகில் மக்களைப் பிடித்துக்கொள்ளும். ஒவ்வொருவனும் மற்றொருவனின் கையைப் பற்றிப்பிடித்து, ஒருவரையொருவர் தாக்குவார்கள். 14யூதாவும் எருசலேமில் சண்டையிடும். சுற்றுப்புறங்களிலுள்ள பிற இனங்களின் செல்வங்களான தங்கமும், வெள்ளியும், ஆடைகளும் பெருந்திரளாய்ச் சேர்க்கப்படும். 15அதேபோன்ற ஒரு கொள்ளைநோய் அவர்களின் முகாம்களிலுள்ள குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் அங்குள்ள மிருகங்கள் அனைத்தையும் தாக்கும்.
16அப்போது எருசலேமைத் தாக்கிய இனங்கள் எல்லாவற்றிலுமிருந்து தப்பிப் பிழைத்த எல்லோரும் சேனைகளின் கர்த்தராகிய அரசரை வழிபடவும், கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவும் வருடந்தோறும் எருசலேமுக்குச் செல்வார்கள். 17பூமியிலுள்ள பல்லின மக்களில் யாராவது சேனைகளின் கர்த்தராகிய அரசரை ஆராதிக்க எருசலேமுக்குச் செல்லாதிருந்தால், அவர்களின் நாட்டின்மீது மழை பெய்யாது. 18எகிப்து நாட்டு மக்கள் அங்கு சென்று அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப் பண்டிகையைக் கொண்டாடச் செல்லாத இனங்களை வாதிக்கும் அதே கொள்ளைநோயால் கர்த்தர் அவர்களையும் வாதிப்பார். 19இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனையாகவும், கூடாரப் பண்டிகையைக் கொண்டாடச் செல்லாத அனைத்து பிற இனங்களுக்கும் வரும் தண்டனையாகவும் இருக்கும்.
20அந்தநாளில் குதிரைகளின் மணிகளில், “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஆலயத்திலுள்ள சமையல் பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக உள்ள தூய்மையான கிண்ணங்களைப் போல் இருக்கும். 21அப்போது எருசலேமிலும் யூதாவிலும் ஆலயத்திலுள்ள ஒவ்வொரு சமையல் பானையும் சேனைகளின் கர்த்தருக்கு தூய்மையானதாக இருக்கும்; அங்கு பலியிட வருகின்ற யாவரும் அப்பானைகளில் சிலவற்றை எடுத்து அவற்றில் சமைப்பார்கள்; அந்தநாள் தொடக்கம் இனியொருபோதும் சேனைகளின் கர்த்தரின் ஆலயத்தில் எந்தவொரு கானானியனும்#14:21 கானானியனும் அல்லது வியாபாரி இருப்பதில்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா 14: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்