மாற்கு 4

4
விதை விதைக்கின்றவனைப் பற்றிய உவமை
1திரும்பவும் இயேசு கடலோரத்திலிருந்து போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், அவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகொன்றில் ஏறி அதில் அமர்ந்தார். மக்களோ கடலோரமாய் நின்றார்கள். 2அவர் பல காரியங்களை அவர்களுக்கு உவமைகள் மூலமாக கற்றுக்கொடுத்தார். அவர் தமது போதனையில் அவர்களுக்குச் சொன்னதாவது: 3“கேளுங்கள்! ஒரு விவசாயி தனது பயிர்விதைகளை விதைப்பதற்காகப் புறப்பட்டான். 4அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 5சில விதைகள் அதிக மண் இல்லாத பாறை நிலங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவாக முளைத்தன. 6ஆனால், வெய்யில் அதிகமானபோது பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததனாலே, அவை காய்ந்து போய்விட்டன. 7வேறு சில விதைகள் முட்புதர்களின் இடையே விழுந்தன, முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கி விட்டன. அதனால், அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. 8வேறு சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து, முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன” என்றார்.
9பின்பு இயேசு, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார்.
10அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைக் குறித்த விளக்கத்தை அவரிடம் கேட்டார்கள். 11அவர் அவர்களிடம், “இறைவனுடைய இராச்சியத்தின் இரகசியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளியில் இருக்கின்றவர்களுக்கோ அனைத்து காரியங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன. 12இதனால்,
“ ‘அவர்கள் இறைவனிடம் திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாதபடி,
அவர்கள் எப்போதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,
ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும்,
அவர்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தாலும்,
ஒருபோதும் புரிந்துகொள்ளாமலும் இருப்பதற்காகவே
இவ்வாறு கூறப்படுகிறது’ ”#4:12 ஏசா. 6:9,10
என்றார்.
13பின்பு இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு புரியவில்லையா? அவ்வாறானால், மற்றைய உவமைகளையெல்லாம் எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்?” என்று கேட்டார். 14“விவசாயி வார்த்தையை விதைக்கின்றவர். 15சில மக்கள் பாதையருகே விதைகள் வீழ்ந்ததைப் போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். 16பாறை நிலங்களில் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை உடனே மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள். 17ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கின்றார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டமும் துன்பமும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்து போகின்றார்கள். 18முட்புதர்களுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள். 19ஆனாலும் இந்த உலக வாழ்வின் கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும் இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து அந்த வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது. 20விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்கின்றவர்கள்; அவர்கள் முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலை கொடுக்கின்றார்கள்” என்றார்.
தாங்கியின் மேல் விளக்கு
21மேலும் அவர் அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவந்து, அதைத் தானியம் அளக்கின்ற ஒரு கூடையினால் மூடியோ அல்லது ஒரு கட்டிலின் கீழ் மறைத்தோ வைப்பார்களா? இல்லையே, அதை விளக்குத் தண்டின்மீது அல்லவா வைப்பார்கள்? 22ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரியவரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும். 23காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
24அவர் தொடர்ந்தும்: “நீங்கள் கேட்பவைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்; அதிகமாகவும் உங்களுக்கு கொடுக்கப்படும். 25இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
வளரும் விதையின் உவமை
26மேலும் அவர் சொன்னதாவது: “இறைவனுடைய இராச்சியமானது ஒருவர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. 27அவன் இரவு வேளைகளில் நித்திரைகொண்டு பகல் வேளைகளில் விழித்தெழும்பும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைவிட்டு வளருகிறது. 28மண் தானாகவே பலன் கொடுத்து, முதலில் பயிரையும் பின்பு கதிரையும், அதன் பின்னர் கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கின்றது. 29பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், விதைத்தவன் அதன்மீது அரிவாளை வைக்கிறான்.”
கடுகுவிதையின் உவமை
30திரும்பவும் அவர்: “இறைவனுடைய இராச்சியத்தை நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விபரித்துக் கூறுவோம்? 31அது கடுகுவிதையைப் போன்று பூமியிலுள்ள அனைத்து விதைகளிலும் சிறியதாக இருக்கின்றது. 32இருந்தாலும், அது விதைக்கப்பட்டு, முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாக, ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக்கூடிய அளவுக்கு கிளைவிட்டு வளர்கிறது” என்றார்.
33அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார். 34உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது அவர்களுக்கு எல்லாவற்றையும் விபரித்தார்.
இயேசு புயலை அடக்குதல்
35அன்று மாலை வேளையானபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். 36அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு அவர் இருந்த படகில் இருந்தவண்ணமாகவே அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போனார்கள். அவருடன் வேறு சில படகுகளும் சென்றன. 37அப்போது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின் மேல் மோதின. அதனால் படகில் தண்ணீர் நிரம்பியது. 38இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணையை வைத்து நித்திரை செய்து கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் அழியப் போகின்றோம், அதைப்பற்றி உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.
39அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டு கடலைப் பார்த்து, “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40அவர் தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.
41அப்போது அவர்கள் பயமடைந்து, “இவர் யாரோ? காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மாற்கு 4: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

மாற்கு 4 க்கான வீடியோக்கள்