மீகா 7
7
இஸ்ரயேலின் அவலநிலை குறித்து மீகாவின் கவலை
1என் நிலைமை எவ்வளவு அவலம் நிறைந்ததாய் இருக்கின்றது!
கோடைகால அறுவடைக்குப் பின்னர் திராட்சைத் தோட்டத்தில்
விடப்பட்ட பழங்களைப் பொறுக்குபவன் போலானேன்;
சாப்பிடுவதற்கான ஒரு திராட்சைக் குலையும் இல்லை.
நான் சாப்பிட ஆசைப்படும்
முதல் பழுத்த அத்திப் பழமும் அங்கு இல்லை.
2நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள்.
நீதிமான் ஒருவனும் இல்லை.
அனைவருமே இரத்தம் சிந்த பதுங்கிக் காத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொருவனும் மற்றவனை#7:2 மற்றவனை – தன் சக நாட்டவனனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான்.
3அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை.
ஆட்சியாளன் அன்பளிப்புகளை வற்புறுத்திக் கேட்கின்றான்.
நியாயாதிபதிகள் இலஞ்சம் கேட்கின்றார்கள்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் தாம் விரும்புவதையே கட்டளையிடுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்து சதி செய்கின்றார்கள்.
4அவர்களில் சிறந்தவன் முட்செடி போல் இருக்கின்றான்.
நீதிமான் முள்ளைவிட மிகவும் கூர்மையானவன்.
இறைவன் உங்களைச் சந்திக்கும் நாளாகிய,
உங்கள் இறைவாக்கினர்கள் எச்சரித்த அந்த தண்டனையின் நாள் வந்துவிட்டது.
இதுவே அவர்களின் குழப்பத்தின் காலம்.
5அயலவனை நம்பாதே.
சிநேகிதன்மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன் மடியிலே படுத்துக்கொள்கின்றவளுடனும்
உன் வார்த்தைகளைக் குறித்துக் கவனமாயிரு.
6ஏனெனில், மகன் தந்தையை அவமதிக்கிறான்;
மகள் தன் தாய்க்கு எதிராக எழுந்திருக்கிறாள்;
மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள்;
ஒரு மனிதனுடைய பகைவர்கள் அவன் வீட்டாரே.
7நானோ, எதிர்பார்ப்புடன் கர்த்தரின் உதவிக்காகக் காத்திருக்கின்றேன்.
என் இரட்சகராகிய இறைவனுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இறைவன் என் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.
இஸ்ரயேல் உயரும்
8எருசலேம் மக்கள் சொல்கிறதாவது:
என் பகைவனே, என்னைக் கேலி செய்து மகிழாதே;
நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்.
நான் இருளில் உட்கார்ந்தாலும் கர்த்தர் எனக்கு ஒளியாயிருப்பார்.
9நான் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தபடியால்,
அவர் எனக்காக வாதாடி,
என் நியாயத்தை நிலைநிறுத்தும் வரை,
அவரின் கோபத்தைச் சுமப்பேன்.
அவர் என்னை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார்.
நான் அவரது நீதியைக் காண்பேன்.
10அப்போது என் பகைவன் இதைக் கண்டு
வெட்கத்துக்குள்ளாவான்.
“உனது கர்த்தராகிய இறைவன் எங்கே?”
என்று என்னிடம் கேட்டவளின்
வீழ்ச்சியை என் கண்கள் காணும்.
அப்போது அவள் வீதிகளிலுள்ள
சேற்றைப் போல் காலின் கீழ் மிதிக்கப்படுவாள்.
11உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள்
வருகின்றது,
உங்கள் எல்லையை விரிவுபடுத்தும் நாளும் வருகின்றது.
12அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும்
உங்கள் மக்கள் உங்களிடம் வருவார்கள்.
எகிப்து முதல், யூப்பிரட்டீஸ் நதி வரையுள்ள தேசங்களிலிருந்தும்,
ஒரு கடல் முதல் மறுகடல் வரையுள்ள நாடுகளிலிருந்தும்,
ஒரு மலை முதல் மறு மலை வரையுள்ள இடங்களிலிருந்தும்
உங்கள் மக்கள் அனைவரும் உங்களிடம் ஒன்றுகூடி வருவார்கள்.
13ஆயினும் பூமியின் மற்றைய பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின்
தீய செயல்களின் பொருட்டு பாழாகிப் போய்விடும்.
மன்றாட்டும் துதியும்
14கர்த்தரே, காட்டிலே ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே
தனியாக வாழ்கிறவர்களான உமது மக்களை,
உமது உரிமைச் சொத்தான மந்தையை,
உமது கோலினால் மேய்த்துக் கொள்வீராக!
முன்னைய நாட்களைப் போல் அவர்கள் பசுமையான பாசானிலும்,
கீலேயாத்திலும் மேயட்டும்.
15“நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப் போல,
நான் உங்களுக்கு என் அதிசயங்களைக் காண்பிப்பேன்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
16அனைத்து பிற இனத்தினரும் அதைக் கண்டு வெட்கமடைவார்கள்.
அவர்கள் தங்கள் ஆற்றல்களை
இழந்து தங்கள் வாயைக் கைகளால் பொத்திக்கொள்வார்கள்.
அவர்களுடைய காதுகள் கேளாமற் போகும்.
17அவர்கள் பாம்பைப் போலவும்,
நிலத்தின் ஊரும் உயிரினங்களைப் போலவும் புழுதியை நக்குவார்கள்.
அவர்கள் தங்கள் குகைகளை விட்டு நடுக்கத்துடன் வெளியேறுவார்கள்.
எங்கள் இறைவனாகிய கர்த்தரிடத்தில் அவர்கள் பயத்துடன் திரும்பி வருவார்கள்.
அப்போது அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.
18உமக்கு நிகரான இறைவன் யார்?
உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு,
அவர்களுடைய மீறுதல்களை மன்னிக்கிற உமக்கு நிகரானவர் யார்?
நீர் என்றென்றும் கோபமாயிருப்பவர் அல்ல.
ஆனால் இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கின்றீர்.
19நீர் மறுபடியும் எங்கள்மீது கருணை காட்டுவீர்.
நீர் எங்கள் பாவங்களைக் காலின் கீழ் மிதித்து,
எங்கள் அனைத்து அக்கிரமங்களையும் கடலின் ஆழங்களில் வீசியெறிந்து விடுவீர்.
20முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு
ஆணையிட்டு வாக்குக் கொடுத்தபடியே,
நீர் யாக்கோபுக்கும் உண்மையுள்ளவராய் இருப்பீர்;
ஆபிரகாமுக்கு நிலையான அன்பைக் காட்டுவீர்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மீகா 7: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.