லேவியராகமம் 5
5
1ஒருவன் தான் கண்டிருந்த அல்லது அறிந்திருந்த ஏதாவது ஒன்றைப்பற்றி, சாட்சி சொல்லும்படி பிறப்பிக்கப்பட்ட பகிரங்கக் கட்டளையைக் கேள்விப்பட்டிருந்தும், அவன் அதை சொல்லத் தவறி பாவம் செய்தால் அவன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
2அசுத்தமான காட்டுமிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகின்றவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமுள்ளவனாகி குற்றவாளியாகிறான். 3அல்லது எந்த அசுத்தத்தினாலாவது கறைப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான். 4ஒருவன் கவனயீனமாய் வாயில் வந்தபடி முன்யோசனையின்றி, நன்மையான அல்லது தீமையான எதையாவது செய்வதாக சத்தியம் செய்திருந்தால், அவன் அதை அறியாதிருந்தாலும் அவன் அதை அறிந்துகொள்கின்றபோது குற்றவாளியாவான். 5எவனாவது இவ்விதமான ஒன்றில் குற்றமுள்ளவனாகும்போது, தான் எவ்வகையில் பாவம் செய்தான் என்பதை அவன் அறிக்கையிட வேண்டும். 6அவன், தான் செய்த பாவத்துக்குத் தண்டனையாக மந்தையிலிருந்து பெண்செம்மறியாட்டுக்குட்டியையோ அல்லது பெண்வெள்ளாட்டுக்குட்டியையோ பாவநிவாரணபலியாக கர்த்தரிடத்தில் கொண்டுவர வேண்டும். மதகுரு அவனுக்காக அவனுடைய பாவத்துக்காக பாவநிவர்த்தி செய்யவேண்டும்.
7அவன் ஒரு செம்மறியாட்டுக்குட்டியைக் கொடுக்க வசதியற்றவனாயிருந்தால், அவன் இரண்டு புறாக்களையோ அல்லது இரண்டு மாடப் புறாக் குஞ்சுகளையோ தன் பாவத்துக்கான தண்டனையாக கர்த்தரிடத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றையதைத் தகனபலியாகவும் கொண்டுவர வேண்டும். 8அவன் அவற்றை மதகுருவிடம் கொண்டுவர வேண்டும். மதகுரு முதலாவதாக ஒன்றைப் பாவநிவாரணபலியாகச் செலுத்த வேண்டும். அவன் அதன் கழுத்திலிருந்து தலையைத் திருக வேண்டும். அதை முழுமையாக துண்டித்துப் போடக்கூடாது. 9பாவநிவாரணபலியின் இரத்தத்தில் சிறிதளவைப் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிட வேண்டும். இது பாவநிவாரணபலி. 10விதிக்கப்பட்ட விதிமுறைப்படியே, மதகுரு மற்றைய பறவையை தகனபலியாகச் செலுத்தி, அவன் செய்த பாவத்துக்காக அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யவேண்டும். அப்போது அவன் மன்னிக்கப்படுவான்.
11“ஆனாலும், இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப் புறாக் குஞ்சுகளையாவது கொண்டுவர அவன் வசதியற்றவனாயிருந்தால், அவன் தன் பாவத்துக்கான காணிக்கையாக, எப்பா அளவான மெல்லிய மாவில் பத்தில் ஒரு பங்கை#5:11 பத்தில் ஒரு பங்கை – சுமார் 3.5 கிலோ கிராம் மா பாவநிவாரணபலியாகக் கொண்டுவர வேண்டும். அது பாவநிவாரணபலியாக இருப்பதால், அந்த மாவின்மீது எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. 12அவன் அதை மதகுருவிடம் கொண்டுவரும்போது மதகுரு அந்த மாவிலிருந்து கைப்பிடி அளவுள்ள மாவை ஞாபகார்த்தப் பங்காக எடுத்து, அதை பலிபீடத்தில் நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்படும் பலிகளின்மீது எரிக்க வேண்டும். இது பாவநிவாரணபலி. 13இவ்விதமாய் அவன் செய்த இந்தப் பாவங்களில் எதற்கானாலும், மதகுரு அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்போது அவன் மன்னிக்கப்படுவான், எஞ்சியுள்ள காணிக்கை தானியபலியைப் போல மதகுருவுக்கு உரியதாகும்.”
குற்றநிவாரணபலி
14மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது, 15“ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் உண்மையற்று அறியாது பாவம் செய்கின்றபோது, அவன் அதற்கான தண்டனையாக ஆட்டு மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக்கடாவை கர்த்தரிடத்தில் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி வெள்ளியில் சரியான மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இது ஒரு குற்றநிவாரணபலி. 16பரிசுத்தமானவைகளின் விடயத்தில் அவன் செய்த தவறுக்கு அவன் ஈடுசெய்ய வேண்டும். அவன் அதன் மதிப்புடன், ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அவற்றையெல்லாம் மதகுருவிடம் செலுத்த வேண்டும். மதகுரு குற்றநிவாரணபலியாக அந்த செம்மறியாட்டுக்கடாவினால் அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்போது அவன் மன்னிக்கப்படுவான்.”
17“ஒருவன் பாவம் செய்து, கர்த்தரின் கட்டளைகளில் செய்யத் தகாத எதையாவது செய்தால், அவன் அதை அறியாதிருந்தாலும் அவன் குற்றவாளியாக இருக்கின்றபடியால் அவன் தண்டனைக்கு உரியவன். 18அவன் குற்றநிவாரணபலியாக, ஆட்டு மந்தையிலுள்ள ஒரு செம்மறியாட்டுக்கடாவை மதகுருவிடம் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், தகுந்த மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தவறுதலாக செய்த பிழைக்காக மதகுரு அவனுக்காக பாவநிவர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான். 19இது ஒரு குற்றநிவாரணபலி. அவன் கர்த்தருக்கு விரோதமாக தவறிழைத்த குற்றவாளி” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
லேவியராகமம் 5: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.