யோனா 1

1
யோனா கர்த்தரைவிட்டு ஓடுதல்
1அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தபோது சொல்லப்பட்டதாவது: 2“நீ எழுந்து மாபெரும் பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கிப்பாயாக; ஏனெனில், அவர்களுடைய அக்கிரமம் என் பிரசன்னத்துக்கு முன்பாக எழுந்திருக்கின்றது.”
3ஆனால் யோனாவோ எழுந்து, கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு, தர்ஷீஸ் பட்டணத்துக்கு தப்பிச்செல்லப் புறப்பட்டான். அவன் யோப்பா பட்டணத்துக்கு இறங்கிப் போய், அங்கே தர்ஷீஸ் பட்டணத்துக்கு பயணிக்கவிருந்த ஒரு கப்பலைக் கண்டான். அவன் கப்பல் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலுக்குள் இறங்கி, கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து தூரப் போவதற்காக அவர்களுடன் தர்ஷீசுக்குப் பயணமானான்.
4அப்போது கர்த்தர் கடலின்மீது பெருங்காற்றை வீசச் செய்தார். கப்பல் உடைந்துபோகும் அளவுக்கு, கடலில் கடும்புயலொன்று உருவாகியது. 5மாலுமிகள் எல்லோரும் திகிலடைந்து, ஒவ்வொருவனும் தத்தமது தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, கப்பலிலிருந்த பொருட்களைக் கடலுக்குள் வீசினார்கள்.
ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்துக்கு இறங்கிச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாகியிருந்தான். 6அப்போது தலைமை மாலுமி அவனிடம் சென்று, “நீ நித்திரை செய்வதென்ன? எழுந்து நீயும் உன் தெய்வத்தைக் கூப்பிடு; ஒருவேளை அவர் நம்மை நினைத்து, அதனால் நாம் அழிவிலிருந்து காப்பாற்றப்படக் கூடும்” என்றான்.
7அப்போது மாலுமிகள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்தப் பேரிடர் நமக்கு நேரிடக் காரணம் யார் என்று அறிந்துகொள்ள சீட்டுக்குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். அவர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. 8எனவே அவர்கள் அவனிடம், “இந்தப் பேரிடர் நம்மீது வரக் காரணமாயிருப்பவர் யார் என்று நீ எங்களுக்குச் சொல்ல வேண்டும். உனது தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகின்றாய்? உனது நாடு எது? நீ எந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள்.
9அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன், சமுத்திரத்தையும் பூமியையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய கர்த்தருக்குப் பயப்படுகிறவன்”#1:9 கர்த்தருக்குப் பயப்படுகிறவன் கர்த்தரை ஆராதிக்கிறவன் என்றும் மொழிபெயர்க்கலாம் எனப் பதிலளித்தான்.
10அவன் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து விலகி ஓடிப்போகின்றவன் என்பதை, அவன் முன்பு கூறியதிலிருந்து அந்த ஆட்கள் அறிந்திருந்ததனால், இன்னும் அதிகமாக அவர்கள் பயமடைந்து, “நீ இவ்வாறு செய்தது என்ன?” என்று அவனிடம் கேட்டார்கள்.
11கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடல் எங்களுக்காக அமைதியடைந்திடும்படி, நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?” என அவனிடம் கேட்டார்கள்.
12அதற்கு அவன், “என்னைத் தூக்கிக் கடலுக்குள் வீசிவிடுங்கள். அப்போது அது அமைதியடையும். ஏனெனில் என்னுடைய குற்றத்தினாலேயே உங்கள்மீது இந்தக் கடும்புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என பதிலளித்தான்.
13ஆனாலும் அந்த மாலுமிகள், துடுப்புவலித்து கப்பலை கரைக்குக் கொண்டுசெல்ல தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். கடல் முன்பு இருந்ததைவிட மிக அதிகமாக அவர்களுக்கு எதிராக கொந்தளித்துக்கொண்டே இருந்தபடியினால் அவர்களால் அது இயலாமலிருந்தது. 14அப்போது அவர்கள் கர்த்தரிடம் உருக்கமாக வேண்டுதல் செய்து, “ஆ கர்த்தாவே, இந்த மனிதனின் உயிருக்காக எங்களை மரணிக்க விட்டுவிட வேண்டாம். குற்றமற்ற ஒரு மனிதனின் இரத்தப் பழியை எங்கள்மீது சுமத்தவும் வேண்டாம். ஏனெனில், கர்த்தாவே, நீர் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கின்றீர்” என்றார்கள். 15அதன் பின்னர் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலுக்குள் வீசிவிட்டார்கள். கொந்தளித்துக் கொண்டிருந்த கடல் அப்போது அமைதியானது. 16இதைக் கண்ட அந்த ஆட்கள் கர்த்தருக்கு மிகவும் பயந்து, அவருக்குப் பலி செலுத்தினார்கள்; அவருக்கு பொருத்தனைகளையும் செய்தார்கள்.
யோனா இறைவனிடம் மன்றாடுதல்
17கர்த்தரோ, யோனாவை விழுங்கும்படியாக ஒரு பெரிய மீனை நியமித்திருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மூன்று இரவும் பகலும் இருந்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோனா 1: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்