எசேக்கியேல் 45
45
நாட்டைப் பங்கிடுதல்
1“நீங்கள் நாட்டை உரிமைச் சொத்தாகப் பங்கிடும்போது நிலத்தின் ஒரு பகுதியை பரிசுத்த பாகமாக கர்த்தருக்கென ஒதுக்கி வைக்கவேண்டும். 25,000 முழ நீளமும் 20,000 முழ அகலமுமாய் இருக்கவேண்டிய அப்பகுதி முழுவதும் பரிசுத்த இடமாக இருக்கும்.#45:1 1 முழம் என்பது 18 அங்குலம் அல்லது 45 சென்ரிமீற்றர் 2அதில் 500 முழம் சதுரமான பகுதி ஆலயமாகவும், அதைச் சுற்றிலும் 50 முழம் அகலமான வெளியான நிலமும் இருக்கவேண்டும். 3பரிசுத்த பாகத்தில் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும் கொண்ட பகுதியை அளப்பாயாக, அதில் மகா பரிசுத்தமான பரிசுத்த இடம் இருக்கும். 4அது கர்த்தருக்கு முன்பாக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்ய அருகில் செல்லும் மதகுருக்களுக்குரிய நிலத்தின் பரிசுத்த பங்காக இருக்கும். அது அவர்களுடைய வீடுகளுக்கான இடமாகவும் பரிசுத்த இடத்துக்குரிய பரிசுத்த பகுதியாகவும் இருக்கும். 5ஆலயத்தின் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும் கொண்ட ஒரு பகுதி அங்கு பணி புரியும் லேவியருக்குரிய உடைமையாயிருக்கும். அங்கு அவர்கள் தாங்கள் வசிப்பதற்கான நகரங்களை அமைத்துக்கொள்வார்கள்.#45:5 அல்லது – அவர்களுக்கு 20 அறைகள் உரிமையாகும்
6“பரிசுத்த பங்குக்கு அடுத்தாற்போல், 25,000 முழ நீளமும் 5,000 முழ அகலமும் கொண்ட நிலத்தை எருசலேம் நகரத்துக்குரிய சொத்தாகக் கொடுக்க வேண்டும். இது முழு இஸ்ரயேலருக்கும் உரிமையாயிருக்கும்.
7“ஒவ்வொரு புறத்திலும் பரிசுத்த பகுதியின் எல்லைகளையும் நகரத்துக்குரிய சொத்தின் எல்லையையும் கொண்டதாக ஆட்சியாளருக்குரிய நிலம் அமைந்திருக்கும். அது மேற்குப்புறத்தில் மேற்குப் பக்கமாகவும், கிழக்குப்புறத்தில் கிழக்குப் பக்கமாகவும் அகன்றிருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு எல்லை வரையுள்ள பகுதி நீண்டு சென்று ஒரு கோத்திரப் பங்குக்கு எதிராயிருக்க வேண்டும். 8அந்நிலம் இஸ்ரயேலிலே அவனுடைய உரிமைச் சொத்தாக இருக்கும். இனிமேல் என் ஆட்சியாளர்கள் என் மக்களை ஒடுக்க மாட்டார்கள். இஸ்ரயேலர் தங்கள் கோத்திரங்களுக்கேற்ப நாட்டை உரிமையாக்கிக்கொள்ள அவர்கள் அனுமதிப்பார்கள்.
9“ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே: இஸ்ரயேலின் ஆட்சியாளர்களே, நீங்கள் செய்தது போதும். உங்கள் வன்முறையையும் அடக்குமுறையையும் விட்டுவிட்டு, நீதியானதையும் நியாயமானதையும் செய்யுங்கள். உங்கள் கொடூரத்தை என் மக்களை விட்டு அகற்றுங்கள் என ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார். 10நீங்கள் அளப்பதற்கு சரியான தராசுகளும், சரியான மரக்கால்களும், சரியான குடங்களும் இருக்கட்டும்#45:10 ஒரு மரக்கால் அல்லது ஒரு குடம் 22 லீட்டர் கொள்ளளவு. 11எப்பாவும் பாத்தும் ஒரே அளவாக இருக்கவேண்டும். பாத்தின் அளவு பத்தில் ஒரு பங்கு ஓமரும், எப்பாவின் அளவு பத்தில் ஒரு பங்கு ஓமருமாக இருக்கவேண்டும். ஓமரே பொது அளவையாக இருக்கவேண்டும்#45:11 ஒரு ஓமர் 220 லீட்டர். 12நிறுப்பதற்குரிய பொது அளவை, சேக்கலாக இருக்கவேண்டும். இருபது கேரா அளவே ஒரு சேக்கல் அளவாகும். அறுபது சேக்கல் ஒரு மினாவுக்கு சமானமாகும்#45:12 ஒரு சேக்கல் 11 கிராம், ஒரு கேரா 0.6 கிராம், ஒரு மினா 660 கிராம்.
13“நீங்கள் செலுத்தவேண்டிய விசேட நன்கொடையானது, ஒவ்வொரு ஓமர் அளவு கோதுமையிலிருந்து, ஆறில் ஒரு பங்கு எப்பா அளவும், ஒவ்வொரு ஓமர் அளவு வாற்கோதுமையிலிருந்து ஆறில் ஒரு பங்கு எப்பா அளவுமாக இருக்கவேண்டும். 14பாத்தினால் அளக்கப்பட்டு, நீங்கள் செலுத்தவேண்டிய எண்ணெயின் அளவு ஒவ்வொரு கோரிற்கும் ஒரு குடம், இது ஒரு கோரின் பத்தில் ஒரு பங்காகும். ஒரு கோர் என்பது பத்து பாத்கள் அடங்கிய ஒரு ஓமர் ஆகும். 15மேலும், இஸ்ரயேலில் நல்ல நீர்ப்பாய்ச்சலுள்ள இடத்தில் மேயும் மந்தைகளில் ஒவ்வொரு இருநூறு செம்மறியாடுகள்கொண்ட மந்தையிலிருந்தும் ஒரு செம்மறியாடு எடுக்கப்பட வேண்டும். இவை மக்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படி, தானியபலிகளாகவும், தகனபலிகளாகவும், சமாதானபலிகளாகவும் பயன்படுத்தப்படும் என ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார். 16இஸ்ரயேலின் ஆட்சியாளனுக்கு இந்த காணிக்கையை மக்கள் கட்டாயமாகக் கொடுக்க வேண்டும்.#45:16 ஆட்சியாளன் தானியங்களையும் விலங்குகளையும் ஆலயத்துக்கு தேவைப்படும் வரை சேகரித்து வைப்பான். 17பண்டிகைகளும், மாதப்பிறப்புகளும், ஓய்வுநாட்களுமான இஸ்ரயேல் மக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து விசேட தினங்களிலும், தகனபலிகளையும் தானியபலிகளையும் பானபலிகளையும் கொடுக்க வேண்டியது ஆட்சியாளனுடைய கடமையாகும். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு பாவநிவர்த்தி செய்வதற்காக அவன் பாவநிவாரணபலிகளையும், தானியபலிகளையும், தகனபலிகளையும், சமாதானபலிகளையும் கொடுப்பான்.
18“ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நீங்கள் குறைபாடற்ற காளையொன்றைக் கொண்டுவந்து பரிசுத்த ஆலயத்தைச் சுத்திகரிக்க வேண்டும். 19மதகுரு பாவநிவாரணபலியின் இரத்தத்தில் சிறிதளவை எடுத்து, அதை ஆலயத்தின் கதவு நிலைகளிலும், பலிபீட மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்திலுள்ள வாயில் நிலைகளிலும் பூச வேண்டும். 20எவராயினும் தவறுதலாகவோ அறியாமலோ பாவம் செய்திருந்தால், முதலாம் மாதத்தின் ஏழாம் நாள் நீங்கள் அவ்வாறே செய்து, ஆலயத்துக்காகப் பாவநிவர்த்தி செய்யவேண்டும்.
21“முதலாம் மாதம் பதினான்காம் நாள் நீங்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடி, ஏழு நாள் புளிப்பூட்டப்படாமல் செய்யப்பட்ட அப்பத்தை உண்ண வேண்டும். 22அந்தநாளில் ஆட்சியாளன் தனக்காகவும், நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பாவநிவாரணபலியாகக் காளையொன்றைக் கொடுக்க வேண்டும். 23பண்டிகையின் ஏழு நாட்களிலும் ஒவ்வொருநாளும் அவன் குறைபாடற்ற ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக்கடாக்களையும், கர்த்தருக்குத் தகனபலியாகவும், ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகவும் செலுத்த வேண்டும். 24அவன் ஒவ்வொரு இளங்காளையோடும், ஒவ்வொரு செம்மறியாட்டுக்கடாவோடும் ஒரு எப்பா#45:24 ஒரு எப்பா 9 கிலோ கிராம் அளவு தானியபலியையும், ஒரு ஹின்#45:24 அதாவது, சுமார் 1 கலன் அல்லது சுமார் 3.8 லீட்டர் என்பதாகும் அளவு எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.
25“ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள் ஆரம்பமாகும் ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படும் கூடாரப் பண்டிகையின்போதும், ஆட்சியாளன் பாவநிவாரணபலிகளுக்கும், தகனபலிகளுக்கும், தானியபலிகளுக்கும் உரியவற்றையும், எண்ணெயையும் அதேவிதமாகச் செலுத்த வேண்டும்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எசேக்கியேல் 45: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.