தானியேல் 7

7
தானியேலின் கனவு
1இவை இடம்பெறுவதற்கு முன்னர்#7:1 இவை இடம்பெறுவதற்கு முன்னர் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. தானி. 5:1, பாபிலோன் அரசன் பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாவது வருடத்தில், தானியேல் ஒரு கனவு கண்டிருந்தான். அவன் படுத்திருக்கும்போது, அவனுடைய சிந்தனையில் தரிசனங்கள் கடந்து சென்றன. தான் கண்ட கனவின் பொருளை அவன் எழுதி வைத்தான்.
2தானியேல் அதை விளக்கிச் சொன்னதாவது: “அந்த இரவில் நான் கண்ட என் தரிசனத்தில், இதோ, ஆகாயத்தின் நாற்திசை காற்றுகளும் பலமாக வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். 3அப்போது நான்கு பெரிய விலங்குகள் கடலில் இருந்து மேலெழுந்து வெளியேறின. அவை ஒன்றிலிருந்து மற்றையது வேறுபட்டவையாக இருந்தன.
4“முதலாவது விலங்கு சிங்கத்தைப் போன்றது; அதற்குக் கழுகின் சிறகுகள் இருந்தன. நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டு, அது நிலத்திலிருந்து மேலே தூக்கப்பட்டது. அப்போது அது ஒரு மனிதனைப் போல் இரண்டு கால்களை நிலத்தில் ஊன்றி நிற்க வைக்கப்பட்டது. அதற்கு ஒரு மனிதனுடைய சிந்தனை கொடுக்கப்பட்டது.
5“இதோ! அங்கே எனக்கு முன்பாக இரண்டாவது மிருகம் நின்று கொண்டிருந்தது. அது கரடியைப் போல் காணப்பட்டது. அதன் ஒரு பக்கம் உயர்த்தப்பட்டதாக இருக்கக் காணப்பட்டது. அதன் வாயிலிருந்த பற்களுக்கிடையில் மூன்று விலா எலும்புகள் இருந்தன. அப்போது, ‘எழுந்திரு, வேண்டிய அளவு மாமிசத்தை குதறித் தின்றிடு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6“அதன் பின்னர் நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, இதோ, எனக்கு முன்பாக சிறுத்தையைப் போல் இருந்த வேறொரு மிருகம் நின்று கொண்டிருந்தது. பறவைகளுக்கு இருப்பதைப் போன்று நான்கு சிறகுகள் அதன் முதுகில் இருந்தன. அந்த மிருகத்துக்கு நான்கு தலைகள் இருந்தன. ஆள்வதற்கான அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
7“அதன் பின்னர், அந்த இரவில் கண்ட தரிசனத்தில், இதோ! திகிலூட்டுவதாகவும், பயங்கரமானதாகவும், மிகவும் வல்லமையுடையதாகவும் இருந்த நான்காவது மிருகத்தைக் கண்டேன். பெரிய இரும்புப் பற்கள் அதற்கு இருந்தன. அது குதறித் தின்று, சின்னாபின்னமாக்கிய பின்னர், எஞ்சியதைத் தனது கால்களால் மிதித்து நசுக்கிப் போட்டது. அது முன்னர் தோன்றிய மிருகங்களைவிட, வித்தியாசமானதாய் இருந்தது. அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8“நான் அந்தக் கொம்புகளை கவனித்துக்கொண்டு இருக்கும்போது, இதோ! அவற்றுக்கு நடுவில் மற்றுமொரு சிறிய கொம்பு எழுந்தது. அதன் காரணமாக முன்பிருந்த கொம்புகளில் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன. இதோ! அந்தச் சிறிய கொம்பில் மனிதனுடைய கண்களைப் போன்ற கண்களும், பெருமையாய் பேசுகின்ற வாயும் இருந்தன.
9“நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும்போது,
“அரியணைகள் உரிய இடத்தில் வைக்கப்பட்டன.
தொன்றுதொட்டு வாழ்பவர் வந்தமர்ந்தார்.
அவரது உடை உறைந்த பனியைப் போல் வெண்மையாயிருந்தது.
அவருடைய தலைமுடி தூய்மையான கம்பளியைப் போல் வெண்மையாய் இருந்தது.
அவரது அரியணையோ கொழுந்துவிட்டு எரிகின்ற தீச்சுவாலைகள்,
அதன் சக்கரங்கள் யாவும் பற்றி எரிந்துகொண்டு இருப்பவை.
10அவர் பிரசன்னத்திலிருந்து
நெருப்பு நதி ஊற்றெடுத்து பெருகி ஓடியது.
பல ஆயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்.
பல கோடிக்கணக்கானோர் சேவை செய்ய அவர் முன்பாகத் தயாராக நின்றார்கள்.
நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்படி கூடிவந்தது;
பதிவேடுகள் திறக்கப்பட்டன.
11“அதன் பின்னர் அந்த சிறிய கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். அந்த மிருகம் கொல்லப்பட்டு, அதன் உடல் அழிக்கப்பட்டு நெருப்பு சுவாலையில் ஒப்படைக்கப்படும் வரை, நான் கவனித்துக் கொண்டிருந்தேன். 12மற்றைய மூன்று மிருகங்களிடமிருந்தோ அவற்றின் ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவை குறிப்பிட்ட காலத்துக்கு உயிர் வாழும்படி அனுமதிக்கப்பட்டன.
13“அந்த இரவில் நான் கண்ட தரிசனத்தில் நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, இதோ! அங்கே எனக்கு முன்பாக ஆகாயத்தின் மேகங்களுடன் மனுமகன் போன்ற ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் தொன்றுதொட்டு வாழ்பவரிடம் வந்தபோது, அவரது பிரசன்னத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 14அனைத்து மக்களும், பிறநாட்டவர்களும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களும் அவருக்கு முன்பாக பணிந்து சேவை செய்யும்படி,#7:14 பணிந்து சேவை செய்யும்படி வழிபடும்படி என்றும் மொழிபெயர்க்கலாம் அவருக்கு ஆள்வதற்கான அதிகாரமும், மகிமையும், இராச்சியமும் கொடுக்கப்பட்டன. அவரது ஆளுகை ஒழிந்துபோகாத ஆளுகை, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராச்சியம் ஒருபோதும் அழிந்து போகாது.
கனவின் விளக்கம்
15“தானியேலாகிய நான் ஆவியில் என்னுள்ளே#7:15 என்னுள்ளே – மூலமொழியில் உறையினுள்ளே என்றுள்ளது வேதனைப்பட்டேன், என் சிந்தனையின் ஊடாகக் கடந்து சென்ற தரிசனங்கள் என்னைக் கலக்கமடையச் செய்தன. 16அங்கே அருகில் நின்றவர்களில் ஒருவரை நான் அணுகி, இவற்றின் தீர்க்கமான விளக்கம் என்னவென்று கேட்டேன்.
“அப்போது அவர் எனக்கு அவற்றின் உட்பொருளைச் சொன்னார். 17‘அந்த நான்கு பெரிய மிருகங்களும், பூமியிலிருந்து தோன்றப்போகும் நான்கு அரசர்கள். 18இருந்தாலும் மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களே அரசாட்சியைப் பெற்று, இராச்சியத்தை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார்கள். ஆம், என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார்கள்.’
19“அதன் பின்னர் நான்காவது மிருகத்தைப்பற்றிய விளக்கத்தை அறிய விரும்பினேன். இந்த மிருகம் மற்றைய எல்லாவற்றிலும் வித்தியாசமானதும், மிகுந்த பயங்கரமானதும், இரும்புப் பற்களையுடையதும், வெண்கல நகங்களை உடையதுமாய் இருந்தது. அதனால் தாக்கப்பட்டவர்களை அது குதறித் தின்று, சின்னாபின்னமாக்கிய பின்னர், எஞ்சியதைத் தனது கால்களால் மிதித்து நசுக்கிப் போட்டது. 20அத்தோடு அதன் தலையிலிருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், பின்னர் முளைத்த மற்றைய கொம்பைப் பற்றியும் அறிய விரும்பினேன். முன்பிருந்த மூன்று கொம்புகளையும் விழப்பண்ணின இந்தக் கொம்பு, மற்றையவைகளைவிடப் பலமுடையதாய்க் காணப்பட்டது. அதற்கு கண்களும், பெருமை பேசும் வாயும் இருந்தன. 21நான் பார்த்தபோது, அந்தக் கொம்பு பரிசுத்தவான்களுக்கு எதிராகப் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது. 22தொன்றுதொட்டு வாழ்பவர் வந்து மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களின் சார்பாக நியாயத்தீர்ப்பு வழங்கும் வரைக்கும், அவர்களுக்கு இராச்சியம் உரிமையாகக் கிடைக்கும் காலம் வரும் வரைக்கும், அது யுத்தம் செய்துகொண்டு இருந்தது.
23“எனக்கு அவர் கொடுத்த விளக்கமாவது: ‘அந்த நான்காம் மிருகம் பூமியில் தோன்றப்போகும் நான்காம் இராச்சியத்தைக் குறிக்கும். அது மற்றைய அனைத்து இராச்சியங்களையும்விட, வித்தியாசமானதாய் இருக்கும். அது உலகம் முழுவதையும் குதறித் தின்று, சின்னாபின்னமாக்கிய பின்னர், தனது கால்களால் மிதித்து நசுக்கிவிடும். 24அந்தப் பத்துக் கொம்புகளும், அந்த அரசில் இருந்து தோன்றப்போகின்ற அரசர்கள். முன்னைய அரசர்களைவிட வித்தியாசமான ஒருவன் அவர்களுக்குப் பின் தோன்றுவான். அவன் மூன்று அரசர்களைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான். 25அவன் மகா உன்னதமானவருக்கு எதிராகப் பேசுவான். அவன் அதிஉன்னதமானவரின் பரிசுத்தவான்களை ஒடுக்கிச் சோர்வடையச் செய்து, நியமிக்கப்பட்ட கால அட்டவணைகளையும், சட்டங்களையும் மாற்ற முயற்சி செய்வான். பரிசுத்தவான்கள் அவனிடத்தில் ஒரு காலத்துக்கும், காலங்களுக்கும்#7:25 காலங்களுக்கும் – இது இரண்டு காலங்களை குறிப்பதாக இருக்கலாம்., அரைக் காலத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26“ ‘ஆனால், பரலோக#7:26 பரலோக – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கூடிவரும். அப்போது அவனுடைய ஆட்சி அதிகாரம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, என்றென்றுமாய் முற்றாக அழிக்கப்படும். 27அப்போது வானத்தின் கீழுள்ள அனைத்து இராச்சியங்களின் ஆளுமையும், வல்லமையும், மகத்துவமும், மகா உன்னதமானவருடைய மக்களான பரிசுத்தவான்களிடம் கையளிக்கப்படும். அவரது இராச்சியம் நித்திய அரசாயிருக்கும். அனைத்து ஆளுநர்களும் அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.’
28“இத்துடன் விடயம் முற்றுப் பெறுகிறது. ஆனால், தானியேலாகிய நான் என் சிந்தனையில் மிகவும் கலக்கமடைந்தேன். என்னுடைய முகம் மாறுபட்டது. என்றாலும், இவற்றை நான் என்னுடனே என் மனதிலே வைத்துக்கொண்டேன்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தானியேல் 7: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்