ரோமர் 1:18-32

ரோமர் 1:18-32 TAOVBSI

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

ரோமர் 1:18-32 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 1:18-32

கோபத்தை மேற்கொள்வது எப்படி? ரோமர் 1:18-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 நாட்கள்

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.

குணமாக்கும் கிறிஸ்து ரோமர் 1:18-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.