சங்கீதம் 119:41-80

சங்கீதம் 119:41-80 TAOVBSI

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.