லேவியராகமம் 23:1-14

லேவியராகமம் 23:1-14 TAOVBSI

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன: ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும். முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

லேவியராகமம் 23:1-14 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்