உபாகமம் 10:12-22

உபாகமம் 10:12-22 TAOVBSI

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்தேவன் அவரே. உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.