தானியேல் 9:20-24

தானியேல் 9:20-24 TAOVBSI

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.