1 சாமுவேல் 2:1-11

1 சாமுவேல் 2:1-11 TAOVBSI

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப் போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப்பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர். கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுவேல் 2:1-11

அன்னாள் 1 சாமுவேல் 2:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

அன்னாள்

5 நாட்கள்

அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.