1 இராஜாக்கள் 8:22-61

1 இராஜாக்கள் 8:22-61 TAOVBSI

பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர். தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக. தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ்செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால், அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவீராக. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம் பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டு போகும்போது, அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக. அவர்கள் எகிப்தென்கிற இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான். சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து, நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது: தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக. கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக, அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக. ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.