சங்கீத புத்தகம் 104:10-23

சங்கீத புத்தகம் 104:10-23 TAERV

தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர். பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது. நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன. வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும். மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன. மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார். நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம். அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன. நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும் நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும், நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார். லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார். அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும். காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும். தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர். எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும். எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர். தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும். அப்போது சூரியன் எழும்பும், மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும். அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்