மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:18-38

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:18-38 TAERV

இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் குமாரத்தி சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான். உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள். இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள். இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது. இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள். இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர். பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள். அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள். ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள். இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். இயேசு தம் சீஷர்களிடம், “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்