மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:13-22
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:13-22 TAERV
இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்: “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில் யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார். இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். பேதுரு என்றழைக்கப்பட்ட சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் அவர் கண்டார். மீனவர்களான அச்சகோதரர்கள் இருவரும் ஏரியில் வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம், “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார். எனவே, அச்சகோதரர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.


