லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:47-71

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:47-71 TAERV

இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான். இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார். அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள். ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான். ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான். ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான். ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான். சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள். மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள். அவர்கள், “நீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்” என்றார்கள். இயேசு அவர்களுக்கு, “நான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள். ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்” என்றார். அவர்கள் எல்லாரும், “அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு “ஆம், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் சொல்வது சரியே” என்றார். அவர்கள், “ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!” என்றனர்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:47-71 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்