லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:32-59

லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:32-59 TAERV

“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.” “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார். “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார். “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான். அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார். “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார். “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார். இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள். மகன் தந்தையை எதிர்த்து நிற்பான். தந்தை மகனை எதிர்த்து நிற்பான். தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள். மகள் தாயை எதிர்த்து நிற்பாள். தாய் மகளை எதிர்த்து நிற்பாள். மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள். மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள். மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.” பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார். “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:32-59 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்