லேவியராகமம் 23:33-43

லேவியராகமம் 23:33-43 TAERV

கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.