யோவான் எழுதிய சுவிசேஷம் 12:27-50

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:27-50 TAERV

“நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார். அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது. அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர். மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார். ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர். பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார். இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. “கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்? தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும், “தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார். ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர். பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான். “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்