ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:1-9
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:1-9 TAERV
ஆகாஸ் யோதாமின் குமாரன், யோதாம் உசியாவின் குமாரன், ரேத்சீன் ஆராமின் ராஜா. ரெமலியாவின் குமாரனான பெக்கா இஸ்ரவேலின் ராஜா. ஆகாஸ் யூதாவின் ராஜாவாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப்போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை. “ஆராமின் படையும் இஸ்ரவேலின் படையும் சேர்ந்துகொண்டு அவை இரண்டும் போருக்கு வந்துள்ளன” என்ற செய்தி தாவீதின் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது. ஆகாஸ் ராஜா இதனைக் கேள்விப்பட்டதும், அவனும் ஜனங்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்களைப்போன்று நடுங்கினார்கள். பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது குமாரனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப்போங்கள். இது வண்ணார நிலத்துக்குப்போகும் தெரு. “ஆகாசிடம், ‘எச்சரிக்கையாக இரு, ஆனால் அமைதியாக இரு. அஞ்சாதே, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் உனக்கு அச்சம் ஏற்படுத்தும்படிவிடாதே! அவர்கள் இருவரும் இரண்டு எரிந்த கட்டைகளைப்போன்றவர்கள். முன்பு எரிந்தார்கள். இப்போது அவர்கள் வெறுமனே புகைகிறார்கள். ரேத்சீன், ஆராம், ரெமலியாவின் குமாரன் ஆகிய அனைவரும் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள். அவர்கள்: “நாம் போய் யூதாவிற்கு எதிராகச் சண்டையிடுவோம். நாம் யூதாவை நமக்காகப் பங்கிட்டுக்கொள்வோம். நாம் தாபேயாலின் குமாரனை யூதாவின் புதிய ராஜாவாக்குவோம் என்றனர்.”’” எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது. தமஸ்குவின் ராஜாவாக ரேத்சீன் இருக்கும்வரை இது நடக்காது. எப்பிராயீம் (இஸ்ரவேல்) இப்போது ஒரு தேசம். ஆனால் எதிர்காலத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு நாடாக இருக்காது. சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் குமாரன் சமாரியாவின் ராஜாவாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.

