ஆதியாகமம் 35:1-5

ஆதியாகமம் 35:1-5 TAERV

தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார். எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான். எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான். யாக்கோபும் அவனது குமாரர்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை.