எஸ்றாவின் புத்தகம் 3:8-13

எஸ்றாவின் புத்தகம் 3:8-13 TAERV

எனவே எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்த இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்திற்கு பிறகு செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் ஆலய வேலையைத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப எருசலேமுக்கு வந்த ஒவ்வொருவரும் அவர்களோடு வேலைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு லேவியர்களில் இருபது வயதுடையவர்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களையும் தலைவர்கள் ஆக்கினார்கள். கர்த்தருடைய ஆலய வேலைகளை மேற்பார்வையிட்டவர்கள் பெயர்கள் வருமாறு: யெசுவாவும், அவனது குமாரர்களும், கத்மியேலும் அவனது குமாரர்களும், (இவர்கள் யூதாவின் சந்ததியினர்) லேவியர்களாகிய எனாதாத்தின் குமாரர்களும், சகோதரர்களும். கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரத்தை கட்டிடக்காரர்கள் கட்டிமுடித்தனர். அஸ்திபார வேலை முடிந்ததும், ஆசாரியர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். பிறகு தமது எக்காளங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆசாபின் பிள்ளைகள் தாளங்களைப் பெற்றார்கள். அவர்கள் கர்த்தரைத் துதிப்பதற்காக தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டார்கள். முன்பு தாவீது செய்தபடியேயும், கட்டளையிட்டபடியேயும் இது நடந்தது. அவர்கள் மாறி, மாறி துதிப்பாடல்களைப் பாடினார்கள். “கர்த்தர் நல்லவர் எனவே அவரைத் துதியுங்கள், எல்லாக் காலத்துக்கும் அவரது உண்மையான அன்பு தொடர்ந்திருக்கும்.” என்ற பாடல்களைப் பாடினார்கள். பிறகு அவர்கள் பலமாகச் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கர்த்தரைத் துதித்தார்கள். இதற்குக் காரணம் கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடப்பட்டதுதான். ஆனால் பல முதிய ஆசாரியர்களும், லேவியர்களும், குடும்பத் தலைவர்களும், அழுதார்கள். ஏனென்றால் முதியவர்கள் பழைய ஆலயத்தை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள். அதன் அழகை அவர்கள் நினைத்து பார்த்தனர். அவர்கள் புதிய ஆலயத்தை பார்த்ததும் சத்தமிட்டு அழுதனர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சத்தமாக ஆரவாரம் செய்யும்போது இவர்கள் அழுதனர். அவர்களின் ஆரவாரம் வெகுதூரம் கேட்டது. அவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்ததால் எவராலும் அழுகைக்குரல் எது, ஆனந்தக்குரல் எதுவென பிரித்துக் கூறமுடியவில்லை.

எஸ்றாவின் புத்தகம் 3:8-13 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்