எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 32:2-10

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 32:2-10 TAERV

“மனுபுத்திரனே, எகிப்து ராஜாவாகிய பார்வோனைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு: “‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய். ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன். நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய். நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய். நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன். இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன். அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள். பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன். நான் உன்னை வயலில் எறிவேன். எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன். காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும். நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன். நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன். நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன். அது தரைக்குள் ஊறிச்செல்லும். நதிகள் உன்னால் நிறையும். நான் உன்னை மறையும்படி செய்வேன். நான் வானத்தை மூடி நட்சத்திரங்களை இருளச் செய்வேன். நான் சூரியனை மேகத்தால் மூடுவேன், நிலவு ஒளிவிடாது. நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன். நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டுவரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும். உன்னைப்பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் ராஜாக்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் ராஜாக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு ராஜாவும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்