பிரசங்கி 4

4
மரித்துப்போவது நல்லதா?
1ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். 2இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். 3பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.
ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?
4பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன்.
5சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். 6அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.
7மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். 8ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும்.
நண்பர்களும் குடும்பமும் பலம் கொடுக்கிறது
9ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம்.
10ஒருவன் விழுந்தால், இன்னொருவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்து விழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பது மிகவும் மோசமானது.
11இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது. 12ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள்.
ஜனங்கள், அரசியல் மற்றும் புகழ்
13ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள ராஜாவைவிடச் சிறந்தவன். முதிய ராஜா எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான். 14இந்த ஆட்சியில் அந்த இளைய ராஜா ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம். 15ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் இதனை அறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப் பின்பற்றுகிறார்கள். அவன் புதிய ராஜாவாக வருவான். 16ஏராளமான ஜனங்கள் அவனைப் பின்பற்றுவார்கள். ஆனால் பிறகு, அதே ஜனங்கள் அவனை விரும்பமாட்டார்கள். இதுவும் அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப் போன்றது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

பிரசங்கி 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்