அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10-18

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10-18 TAERV

தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார். அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான். கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார். ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான். ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார். எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான்.