அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26-34

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26-34 TAERV

தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான். எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் இராணியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான். ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான். அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ, “அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார். அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார். அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன. உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது. அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான்.