அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24-32

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24-32 TAERV

“அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார். “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை. “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’ “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான். இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர்.