அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1-21

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1-21 TAERV

பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர். அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான். அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன. “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன். தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன். அது விழுந்துவிட்டது. அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன். அவனது வீட்டைப் புதியதாக்குவேன். பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர். யூதரல்லாத மக்களும் என் மக்களே. கர்த்தர் இதைக் கூறினார். இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’ “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன. “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்: ‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்