தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6-10
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6-10 TAERV
ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார். எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார். தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.







