ரோமர் 9:1-15

ரோமர் 9:1-15 TCV

நான் கிறிஸ்துவுக்குள் உண்மையையே சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை; என்னுடைய மனசாட்சியும் பரிசுத்த ஆவியானவரால் இதை உறுதிப்படுத்துகிறது. என்னுடைய இருதயத்தில் பெரிதான துக்கமும், ஓயாத துயரமும் இருக்கின்றன. ஏனெனில் எனது சொந்த மக்களாகிய என்னுடைய யூத சகோதர சகோதரிகள் மீட்படைவதற்காக, முடியுமானால் நானே சபிக்கப்படவும் கிறிஸ்துவிலிருந்து விலக்கப்படவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். அவர்கள்தான் இஸ்ரயேல் மக்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் என்ற உரிமை அவர்களுடையதே; இறைவனுடைய மகிமை, உடன்படிக்கைகள், மோசேயின் சட்டத்தைப் பெற்றுக்கொள்ளுதல், ஆலய வழிபாடுகள், வாக்குத்தத்தங்கள் யாவும் அவர்களுடையதே. முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல. அதேபோல் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அவனுடைய உண்மையான பிள்ளைகளும் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. இதிலிருந்து மனித இயல்பின்படி பிறக்கின்ற பிள்ளைகள் இறைவனுடைய பிள்ளைகளல்ல என்பது தெரிகிறது. இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளே ஆபிரகாமுடைய சந்ததிகளாய் எண்ணப்படுகிறார்கள். ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது. இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள். ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்: அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது. ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை. ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார்.

ரோமர் 9:1-15 க்கான வீடியோ