ரோமர் 1:7-17

ரோமர் 1:7-17 TCV

இறைவனால் அன்பு செலுத்தப்பட்டவர்களும், பரிசுத்தவான்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டவர்களுமான ரோம் நகரில் இருக்கிற உங்கள் அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. முதலாவதாக, உங்கள் விசுவாசம் உலகம் எங்கும் அறியப்படுகிறதினாலே, உங்கள் எல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்துமூலமாய், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லா வேளைகளிலும், என்னுடைய மன்றாட்டுகளில் உங்களை எப்படித் தொடர்ந்து நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாய் இருக்கிறார். நான் இறைவனுடைய மகனைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறதினாலே, என் ஆவியில் இறைவனுக்கு ஊழியம் செய்கிறேன். இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன். உங்களைப் பெலப்படுத்துவதற்காக, நான் ஆவிக்குரிய வரங்களில் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கும்படி, உங்களைக் காண ஆவலாயிருக்கிறேன். இதனால் உங்களுடைய விசுவாசத்தினாலே நானும், என்னுடைய விசுவாசத்தினாலே நீங்களுமாக நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். பிரியமானவர்களே, யூதரல்லாத மக்களின் மத்தியில் நான் அறுவடை செய்ததுபோலவே, உங்கள் மத்தியிலும் அறுவடை செய்யும்படி, நான் உங்களிடத்தில் வருவதற்குப் பலமுறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரைக்கும் வரமுடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. நான் கிரேக்கருக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். அதனாலேயே ரோம் நகரில் இருக்கிற உங்களுக்குங்கூட நற்செய்தியைப் பிரசங்கிக்க இவ்வளவு ஆவலாயிருக்கிறேன். ஏனெனில் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய இரட்சிப்பைக் கொடுக்கின்ற வல்லமையாய் இருக்கிறது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்த நற்செய்தியில்தான், இறைவனிடமிருந்து வரும் நீதி வெளிப்படுத்தப்படுகிறது. “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடி, நீதி தொடக்கத்திலிருந்து முடிவுவரை அந்த விசுவாசத்தினாலே வருகிறது.

ரோமர் 1:7-17 க்கான வீடியோ