சங்கீதம் 107:10-22

சங்கீதம் 107:10-22 TCV

சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள். ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து, அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார். சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள். அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, மரண வாசல்களை நெருங்கினார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.