சங்கீதம் 104:10-23

சங்கீதம் 104:10-23 TCV

அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன. காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்