நீதிமொழி 9:1-9
நீதிமொழி 9:1-9 TCV
ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது. ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது. தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது, “அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது, “வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள். நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; மெய்யறிவின் வழியில் நடங்கள்.” ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்; கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள். ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்; ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள். ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்; நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள்.

