நீதிமொழி 18

18
1நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள்,
அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.
2மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை,
ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
3கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும்,
வெட்கத்துடன் அவமானமும் வரும்.
4வாயின் வார்த்தைகள் ஆழமான கடல்,
ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.
5கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும்,
குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.
6மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும்,
அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
7மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு;
அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.
8புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை;
அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
9தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன்
அழிப்பவனுக்குச் சகோதரன்.
10யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்;
நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
11பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
12வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது,
ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
13கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது,
முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
14மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்;
மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?
15பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது;
ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.
16அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது;
அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது.
17வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே
முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.
18சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும்,
வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும்.
19அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்;
விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.
20அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்;
அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.
21வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது;
நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
22மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்;
அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
23ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்;
ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.
24நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்;
ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நீதிமொழி 18: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்