எண்ணாகமம் 14:1-9

எண்ணாகமம் 14:1-9 TCV

அந்தச் சமுதாய மக்கள் அனைவரும் அன்றிரவு சத்தமாய்க் கூக்குரலிட்டு அழுதார்கள். இஸ்ரயேலர் எல்லோருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் அனைவரும் அவர்களிடம், “நாங்கள் எகிப்தில் இறந்திருக்கலாம் அல்லது இந்த பாலைவனத்திலேயே இறந்திருக்கலாமே! வாளுக்கு இரையாகும்படி யெகோவா ஏன் எங்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருகிறார்? எங்கள் மனைவிகளும், பிள்ளைகளும் அவர்கள் கையில் பிடிபட்டுக் கைதிகளாகப் போகப்போகிறார்களே! அதைவிட நாங்கள் எகிப்து நாட்டிற்குத் திரும்பிப்போவது நலமாயிருக்காதோ?” என்றார்கள். மேலும், “நாம் நமக்கு ஒரு தலைவனைத் தெரிந்துகொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போகவேண்டும்” என்றும் அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும், ஆரோனும் அங்கு கூடியிருந்த இஸ்ரயேல் சபைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள். நாட்டை ஆராய்ந்து அறியச்சென்றவர்களில் நூனின் மகன் யோசுவாவும், எப்புன்னேயின் மகன் காலேப்பும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். அவர்கள் முழு இஸ்ரயேல் சபையையும் பார்த்து, “நாங்கள் கடந்துசென்று ஆராய்ந்து அறிந்த நாடு மிகமிக நல்ல நாடு. யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார். நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாக மட்டும் கலகம் செய்யாதீர்கள். அந்நாட்டு மக்களுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், நாங்கள் அவர்களை அழித்துவிடுவோம். அவர்களுடைய பாதுகாப்பு அவர்களைவிட்டுப் போய்விட்டது. யெகோவா எங்களோடிருக்கிறார். நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்” என்றார்கள்.