மீகா 1:8-16
மீகா 1:8-16 TCV
சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்; வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன். நரியைப்போல் ஊளையிட்டு, ஆந்தையைப்போல் அலறுவேன். ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது; அது யூதாவரை வந்துள்ளது. என் மக்கள் வாழும் எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது. அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; கொஞ்சமும் அழவே வேண்டாம். பெத் அப்பிராவிலே புழுதியில் புரளுங்கள். சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள். சாயனானில் வாழ்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது. அதற்குரிய பாதுகாப்பு உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று. மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து, விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர். ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது. அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது. லாகீசில் வாழ்கிறவர்களே, குதிரைகளை தேரில் பூட்டுங்கள்! நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம். ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன. ஆதலால் யூதாவின் மக்களே, நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள். அக்சீப் பட்டணம் இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும். மரேஷாவில் வாழ்கிறவர்களே, உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார். இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள் அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள். நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி, உங்கள் தலையை மொட்டையடியுங்கள்; அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால், கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.


