மத்தேயு 9:18-38

மத்தேயு 9:18-38 TCV

இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது. இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். “ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார். அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்